நீராட வேண்டிய தலங்கள்!:-
பவானி.........
ஈரோட்டில் இருந்து 12கி.மீ.,தொலைவில் உள்ள தலம் பவானியில் காவிரி, பவானி, அமுதநதி ஆகிய மூன்று நதிகள் கூடுவதால் முக்கூடல் என்றும் பெயருண்டு. பத்மகிரி, நாககிரி, சங்ககிரி, மங்கலகிரி, வேதகிரி ஆகிய ஐந்து மலைகளுக்கு நடுவில் இத்தலத்தில் சங்கமேஸ்வரர் உள்ளார். இப்பெருமானை தரிசிக்கும் பேறு பெறுபவர்களை பாவம் தீண்டாது. மாசிமகத்தன்று சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்பிரமணியர் ஆகியோரை சூரியன் வணங்குவதாக ஐதீகம்.
மகாபலிபுரம்........ தீர்த்தவாரிக்கு பெயர் பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்று மகாபலிபுரம். இங்கு மாசி மகத்தன்று நீராடுவது ராமேஸ்வரத்தில் நீராடிய பலனைத் தரும். இதற்குக் காரணமானவர் புண்டரீக மகரிஷிதான்.
திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெருமாளின் காலடியில் அன்றலர்ந்த தாமரை மலரை வைத்து வணங்க வேண்டும் என்ற ஆவலில் இவர் மகாபலிபுரம் கடற்கரையில் மலரை வைத்துவிட்டு, பாற்கடலுக்கு வழி ஏற்பாடு செய்ய முயற்சித்தார்.
அதற்காக கடல்நீரை தொடர்ந்து இரைத்துக் கொண்டிருந்தார். இவரின் பக்தியை கண்ட திருமால் ஒரு முதியவராக உருக்கொண்டு முனிவரிடம் வந்து, எனக்கு பசியும் களைப்புமாக உள்ளது. ஊருக்குள் சென்று உணவு வாங்கி வாருங்கள். அதுவரை நானே கடல்நீரை உமக்காக இரைக்கிறேன் என்று அனுப்பினார்.
முனிவரும் உணவு வாங்கிவந்து பார்த்தபோது கடல் உள்வாங்கி இருந்தது. முதியவரைக் காணோம். அப்போது ஒரு குரல் கேட்டது. முனிவர் அவ்விடத்தைப் பார்க்க, தான் வைத்த மலரை பாதங்களில் வைத்துக்கொண்டு திருமால் தரையில் பள்ளிகொண்டு ரிஷிக்கு காட்சி தந்தார். ஸ்ரீமன் நாராயணனே தன் திருக்கரத்தால் நீர் இரைத்த இந்த கடலில் மகத்தன்று நீராடுவது பெரும் புண்ணியம்.
திருவெண்காடு............. திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத அகோரமூர்த்தி ஆலயத்தில் மாசி வளர்பிறையில் இந்திர விழா நடக்கிறது. இதை இந்திரனே நடத்தி வைப்பதாக ஐதீகம். விழாவில் சுவாமி காவிரி சங்கமத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார்.
ராமநாதபுரம்......... ராமநாதபுரம் எமனேஸ்வர சிவாலய சிவன், எமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இவ்வாலய எமதீர்த்தத்தில் மாசி மகத்தன்று தெப்பவிழா நடக்கும். சிவ அம்சமாக முருகன் தீர்த்தத்திற்கு எழுந்தருள்வார்.
சென்னை........... சென்னையில் மயிலை கபாலீஸ்வரரும் மாதவப் பெருமாளும் அல்லிக்கேணி அச்சுதனும் கடற்கரை சென்று தீர்த்தமாடித் திரும்புவார்கள்.
திருவேட்டகுடி........... ஒரு சமயம் பார்வதி மீனவப் பெண்ணாய் அவதரித்தாள். அவளைத் திருமணம் முடிக்க காலம் கனிந்தபோது ஈசன் கடற்கரைக்குச் சென்று ஒரு பெரிய ராட்சத மீனை உருவாக்கி மீனவர்களுக்குத் துன்பம் தரச் செய்து பின் அவரே மீனவனாக உருமாறி, அம்மீனை அடக்கி நற்பெயர் பெற்று மீனவப் பெண்ணான பார்வதியை மணந்து கொண்டு பின் சிவனாகக் காட்சி தந்தார்.
மீனவத் தலைவன் உங்களை நாங்கள் எப்போது மீண்டும் காண்பதுப எனக் கேட்க, மாசி மகத்தன்று நாங்கள் கடலாடவருவோம் அப்போது காணலாம் எனக் கூறிச் சென்றார். புராணப்படி இது நடைபெற்ற தலம் திருவேட்டக்குடி அன்று ஈசனும் ஈஸ்வரியும் கடற்கரைக்கு எழுந்தருள்வார்கள். அப்போது கடற்கரை ஊர்களான மண்டபத்தூர், காளிக்குப்பம், அக்கம்பேட்டை மீனவர்கள் தங்கள் இன மாப்பிள்ளையாக வரும் ஈசனை மாப்ளே, மாப்ளே என மகிழ்வுடன் கூவியழைத்து மகிழ்ந்து தரிசிப்பார்கள்.
திருவண்ணாமலை............. வல்லாள மகாராஜா திருவண்ணாமலையை ஆண்டபோது தனக்கு புத்திரபாக்யம் வேண்டும் என அண்ணாமலையாரை தினம் வழிபட்டு வந்தார். அவருக்கு உதவ எண்ணம் கொண்ட ஈசன், அம்மன்னனின் அரண்மனைக்கு குழந்தையாக வந்து தவழ்ந்தார்.
குழந்தையை மன்னன் கையில் எடுத்தவுடன் ஈசன் காட்சியளித்து பக்தனே கவலைப்படாதே நானே உனக்கு மகனாகப் பிறப்பேன். உன் இறுதிக் காலத்திற்குப் பின் மகன் செய்யும் ஈமச் சடங்குகளை உனக்கு நானே செய்வேன் என்றார். அப்படியே மன்னன் சித்தியடைந்த இடமான பள்ளி கொண்டாபட்டில் கவுதமி நதிக்கரைக்கு அண்ணாமலையார் ஆண்டுதோறும் மாசிமகத்தன்று எழுந்தருள்வது தவறாமல் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி........... மாசிமகத்தன்று நூற்றுக்கணக்கான ஆலய சுவாமிகள் அலங்காரத்துடன் புதுவையில் வைத்திக் குப்பம் கடற்கரையில் அமைத்த பந்தலில் எழுந்தருளுவர். பின்னர் தீர்த்தவாரி விழா நடைபெறும். பக்தர்கள் வந்திருந்து அனைத்து சுவாமிகளையும் தரிசித்து புண்ணியம் பெறுவார்கள்.
திருக்காமீஸ்வரம், வரதராஜப் பெருமாளுடன் காரைக்கால் திருப்பட்டணத்தில் மாசிமக தீர்த்தவாரி விழாவில் திருக்கண்ணபுர சவுரிராஜப் பெருமாள், திருமருகல் வரதராஜப் பெருமாள், கோவில் பத்து கோதண்டபானி, நிரவி காளியம்மன், கரியமாணிக்கப் பெருமாள், காரை நித்யகல்யாணப் பெருமாள், கலந்து கொண்டு தீர்த்தவாரி காண்பது காணக்கிடைக்காத ஒன்று.
திருநல்லூர்......... குந்தி, கர்ணனை ஆற்றில் விட்ட பாவம் நீங்க பரிகாரம் கேட்டாள். அதற்கு முனிவர், மாசி மகம் அன்று ஏழு கடலில் நீராடினால் பாவம் விலகும் என்றார். ஒரே நாளில் எப்படி ஏழு கடல்களில் நீராட முடியும்ப என்று இறைவனை வேண்டினாள் குந்தி. அப்போது, திருநல்லூர் கோயில் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது.
அதில் உனக்காக ஏழு கடல் தீர்த்தங்களை வரவழைக்கின்றேன். அந்தத் தீர்த்தத்தை ஏழு கடலாக நினைத்து மாசி மகம் அன்று நீராடு! என்று அசரீரி கேட்டது. குந்தியும் அப்படியே செய்து விமோசனம் பெற்றாள். அந்தத் தீர்த்தமே சப்த சாகர தீர்த்தம் ஆகும். இத்திருத்தலம், தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் திருநல்லூரில் உள்ள பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் ஆகும்.
திருகுறுக்கை........... மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக் குறுக்கை வீரட்டானேஸ்வரத்தில் மாசி மகத்தன்று காம தகனவிழா நடைபெறும். சிவபெருமான் ஆழ்ந்த தியானத் திலிருக்கும்போது, தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமான் மீது மலரம்பு எய்தான் மன்மதன். கோபம் கொண்ட அவரின் நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்ட தீப்பொறிகள் மன்மதனை எரித்து சாம்பலாக்கியது.
பிறகு அவன் மனைவி ரதிதேவியின் வேண்டுதலால், மீண்டும் மன்மதன் அவள் கண்களுக்கு மட்டும் தெரியும் படி சிவபெருமான் அருளினார். இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் விழாவாக காம தகனவிழா மாசிமகத்தன்று நடைபெறும். இரண்யன் என்ற அசுரன் பூமாதேவியைக் கடத்திச் சென்று பாதாள லோகத்தில் ஒளித்து வைத்தான்.
இதனை அறிந்த மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அந்த அசுரனை வதம் செய்து, பூமாதேவியை வெளிக்கொணர்ந்தது மாசி மக நட்சத்திரத் திருநாளில்தான் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.
No comments:
Post a Comment